ரூ.100-க்கு சீறும் ஜல்லிக்கட்டு காளை!! பரிசினை தட்டிச்சென்ற அதிமுக பிரமுகர்.
jalikattu kaalai prize to sujith
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கே.ராசியமங்கலம் கிராமத்தில் அமைந்திருக்கும் 120 அடி உயரம் உள்ள அழகான ஆலயம் புனித அந்தோணியார் ஆலயம். சென்ற ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயம் தஞ்சை மறைமாவட்டத்திலேயே மிகவும் உயரமான கோபுரத்தை கொண்டது என்பது இதற்கான தனிச்சிறப்பு. இந்த ஆலயத்தின் ஆண்டு தேர்த்திருவிழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது.
இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு அந்த கிராமத்தைச் சேர்ந்த புனித அன்னை தெரசா இளைஞர்கள் இயக்கத்தால் மாபெரும் ஜல்லிக்கட்டு காளை பரிசு குலுக்கல் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு ஒரு ஜல்லிக்கட்டு காளை பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக குலுக்கல் சீட்டு ரூபாய் 100 என்ற அடிப்படையில் கடந்த 15 நாட்களாக அந்த இளைஞர் இயக்கத்தினரால் வினியோகம் செய்யப்பட்டது. இந்த குலுக்கல் சீட்டினை அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அந்த கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் இருந்தும் பல்வேறு நபர்கள் வாங்கினர்.
இந்தத் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு அந்த ஊர் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறந்தாங்கி நிஷா மற்றும் பழனி ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பு பாட்டு பட்டிமன்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேர்பவனியும் நிறைவுற்றது.
இதனைத் தொடர்ந்து இந்த தேர் திருவிழாவின் இறுதி நிகழ்வாக மாபெரும் ஜல்லிக்கட்டு காளை பரிசுப் போட்டியின் குழுக்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை புனித அன்னை தெரசா இளையோர் இயக்கத்தினர் நடத்தினர்.
துள்ளி குதிக்கும் அந்த ஜல்லிக்கட்டு காளை யாருக்கு பரிசாக விழ போகின்றது என்ற ஆர்வத்தில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடினர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவனை அழைத்து இளையோர் இயக்கத்தினர் குலுக்கல் நிகழ்ச்சியை அரங்கேற்றினர். அப்போது அந்த சிறுவன் யாருடைய பெயர் எழுதி இருக்கும் சீட்டினை எடுப்பார் என்ற ஆர்வம் அனைவருக்கும் அதிகரிக்கத் துவங்கியது.
அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த தருணம் வந்தது. அந்த சிறுவனும் ஒரு சீட்டை எடுத்து இயக்கத்தின் உறுப்பினர் கையில் கொடுத்தான். அதனை பிரித்து படித்த அந்த இளைஞன் வாசித்த பெயர் "சுஜித் எழில்" .
இந்தப் பெயர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் பெயர். அந்த சிறுவனின் தந்தை திரு.கென்னடி ஒரு அதிமுக பிரமுகர். தனது மகனின் பெயரை கேட்ட அவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். பின்னர் அந்த ஜல்லிக்கட்டு காளையை திரு. கென்னடி அவர்களிடம் புனித அன்னை தெரசா இளையோர் இயக்கத்தினர் வழங்கினார்.மிகுந்த மகிழ்ச்சியில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டு காளையை அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த பரிசுப் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த புனித அன்னை தெரசா இளையோர் இயக்கத்திற்கு ஊர் மக்கள் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.