10 ஆண்டுகளில் 100 பெண்களின் ஆசையை தூண்டி ஏமாற்றிய முதியவர்; சிக்கியது எப்படி என்று பாருங்கள்
10 ஆண்டுகளில் 100 பெண்களின் ஆசையை தூண்டி ஏமாற்றிய முதியவர்; சிக்கியது எப்படி என்று பாருங்கள்
சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவர் நாளிதழில் மறுமணம் செய்ய பெண் தேவை என விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
தன்னை தொடர்பு கொண்ட பெண்களை ஓட்டல்கள், கோவில்களுக்கு வரவழைத்து தொழில் அதிபர் எனக்கூறி அவர்களின் ஆசையை தூண்டியுள்ளார். தன்னுடைய பங்குக்கு நகை வாங்கி வைத்துள்ளதாகவும், பெண் வீட்டு தரப்பில் பணம் அல்லது நகை கொடுத்தால் அதையும் சேர்த்து திருமணத்தின் போது தாலியாக போட்டு விடுவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி அந்த பெண்கள் கொடுத்த நகை, பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சமீபத்தில் ஓசூரை சேர்ந்த 45 வயது பெண், நாளிதழில் மறுமணம் குறித்த விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த நபரை சென்னை தாம்பரம் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஓட்டலில் ஓசூர் பெண் கடந்த வாரம் சந்தித்தார்.
அப்போது அந்த நபர், ஓசூர் பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாகவும், தற்போது கஷ்டமான சூழ்நிலை உள்ளதால் தனக்கு பணம் தேவைப்படுகிறது என கூறியுள்ளார். உடனே அந்த பெண் தன்னிடம் இருந்த 4 பவுன் நகையை கழற்றி கொடுத்தார். நகையை வாங்கிய அந்த நபர் அடகு வைத்து பணம் வாங்கி வருவதாக கூறினார். மேலும் அருகில் உள்ள கடையில் கொய்யா பழங்களை வாங்கி இதை சாப்பிடுங்கள், உடனே வந்து விடுகிறேன் என கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இது குறித்து தாம்பரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கமலக் கண்ணன், பிரவீன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், கஜபதி, சையது மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்தும், அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்தும் போலீசார் அவரை தேடினர். சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் அந்த நபரின் செல்போன் இயங்கியது தெரியவந்தது. இதனால் கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த நபரின் புகைப்படத்தை வைத்து விசாரித்தபோது அவர் மாங்காடு, பள்ளிக்கூட தெருவை சேர்ந்த முருகன் (61) என தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இது குறித்து போலீசார் கூறியதாவது:-
முருகனுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர். திருப்பத்தூரை சேர்ந்த முருகன் 20 ஆண்டுகளாக மாங்காட்டில் குடும்பத்துடன் வசித்துள்ளார். தனியார் நிறுவனங்களில் காவலாளியாக வேலை பார்த்த முருகன் பின்னர் திருவான்மியூரில் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வந்தார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தார்.
அதன்படி மறுமணம் செய்ய பெண்கள் தேவை, விதவை மற்றும் விவாகரத்தான பெண்கள் அணுகவும், ஜாதி தடையில்லை, மாதம் ரூ.47 ஆயிரம் வருமானம் வருவதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்துள்ளார். அதில் தன்னுடைய செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார்.
பின்னர் வேறு செல்போன் எண்ணை கொடுத்து மீண்டும் விளம்பரம் செய்து மோசடியை அரங்கேற்றியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம், நகையை பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து முருகனிடம் இருந்து 18 பவுன் நகை, ரூ.30 ஆயிரம், ஏ.டி.எம் கார்டு, இருசக்கர வாகனம், 2 செல்போன்கள், 100-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.