மாமன்னன் ராஜராஜ சோழன் இந்துவா?? கிளம்பிய சர்ச்சை.! காரசாரமாக பதிலளித்து நடிகர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை.!
ராஜராஜசோழன் இந்துவா?? கிளம்பிய சர்ச்சை.! காரசாரமாக பதிலளித்து நடிகர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை.!
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வருகிறது. இதற்கிடையில் மாமன்னன் ராஜராஜசோழன் இந்து மதத்தை சேர்ந்தவர் எனவும், இல்லை எனவும் இரு தரப்பினர்கள் மத்தியில் விவாதம் ஏற்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி வந்த நிலையில் நடிகர் சரத்குமார் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி இந்து சமயம் என வரையறுத்துள்ளது.
1790 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது, கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர இருந்த பெரும் பிரிவு சமயங்களை சேர்த்து சிந்து நதியில் இருந்து மருவிய இந்து என்ற பெயரிட்டது. காலத்திற்கேற்ற ஆட்சியமைப்பு, ஒருங்கிணைப்பு, வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது. அப்போது ஹோமோசேப்பியன்ஸ் என இருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கிறோமா?
சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை. அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்? இவை அனைத்துமே இறைகொள்கையை அடிப்படையாக கொண்டது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில், தொடர்ந்து சர்ச்சைகள் எழுப்புவது வேதனையானது.
மனித இனத்தின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், சுவாசிக்க தூய்மையான காற்று, கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம், தனிமனித வாழ்க்கைத்தரம் உயர்வு அனைவருக்கும் சமமாக கிடைக்கப்பெறுவது எப்போது? புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, இயற்கை சீர்கேடு, நோய்த் தொற்று பரவல், புதுப்புது வைரஸ் தாக்கம், சமூக சீர்கேடுகள் என தேசத்தில் நடப்பவற்றை தடுப்பது எப்படி? மாற்றுவது எப்போது?
மக்கள் நலனுக்கான முற்போக்கு சிந்தனைகளில் நேரத்தை செலவிடாமல், பின்னோக்கி சென்று வரலாற்றில் சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல் சமயத்தை ஆராய்ந்து மீண்டும் மீண்டும் பேசி சர்ச்சைக்குரிய ஒன்றாக உருவாக்குவது நியாயமா? அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் ஆலிஸ் என்ற உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்துள்ளது.
நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும் போது, செவ்வாய் கோள்களில் குடியேற சிந்திக்கும் போது, ராஜ ராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என விவாதிக்காமல், உலக அதிசயங்களுள் ஒன்றாக வைத்து போற்றக்கூடிய புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த அந்த மாமன்னன் வீரத்தமிழன் ராஜ ராஜ சோழனின் புகழை உலகின் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.