கூட்டத்தில் மாட்டிக்கொண்ட ரசிகரின் காலணிகளை தனது கையில் எடுத்துக்கொடுத்த நடிகர் விஜய்! எஸ்.பி.பி-யின் இறுதி அஞ்சலியில் நடந்த நெகிழ்ச்சி செயல்!
Actor vijay take fan's slipper
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரைப்பிரபலங்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் அவரது வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள்அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு எஸ்பிபி அவர்களின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பண்ணை வீட்டில் அவரது உடலுக்கு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிலையில், பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு நடிகர் விஜயைக் கண்ட அவரது ரசிகர்கள் உடனடியாக அவரை சூழந்து கொண்டனர். இதனையடுத்து போலீசார் பாதுகாப்பில் நடிகர் விஜய் அழைத்துச்செல்லப்பட்டார். அந்த சமயத்தில் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில், காவல்துறையினர் விஜயை பாதுகாப்பாக வெளியே அழைத்துச்செல்ல முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் ரசிகர்கள் சிலர் கீழே விழுந்தனர். அப்போது கீழே விழுந்த ரசிகர்களின் காலணிகளை விஜய் தாமாக முன் வந்து எடுத்துக்கொடுத்த சம்பவம் ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.