முடிவுக்கு வருகிறதா ரஜினியின் 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கை..? இதுதான் ரஜினியின் கடைசி படமா?
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளதால் இனி அவர் படங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளதால் இனி அவர் படங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்ததை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடிக்க தொடங்கினார் ரஜினி.
தமிழ் சினிமாவில் வில்லனாக இவர் நடித்த 16 வயதினிலே திரைப்படம் இவரை மேலும் புகழடைய செய்தது. அதன்பிறகு தமிழ் சினிமாவில் பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார் ரஜினிகாந்த். இந்திய அளவில் மிகவும் பிரபலமான இவர் கடந்த 1996 ஆம் ஆண்டே தமிழக அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், பலவருட எதிர்பார்ப்பிற்கு பிறகு 2020 ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை உறுதி செய்துள்ளார் ரஜினி.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். இதனை அடுத்து ரஜினிகாந்தின் அரசியல் கட்சி சார்ந்த வேலைகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.
அரசியல் வேலைகள் ஒருபுறம் இருக்கும்நிலையில், ரஜினிகாந்த் இனி படங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துவிட்டதாக கூறப்படும்நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது ரஜினிகாந்த் முழு நேர அரசியலில் இறங்கிவிட்டதால் இனி அவர் சினிமாவில் கவனம் செலுத்துவாரா என்பதும் சந்தேகமே. அதேநேரம் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதால் அவர் ஒரே நேரத்தில் அரசியல், சினிமா இரண்டிலும் கவனம் செலுத்தவும் வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.
ஒருவேளை ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து விலகும் பட்சத்தில் தற்போது அவர் நடித்துவரும் அண்ணாத்த படம்தான் கடைசி படமாக இருக்கும் என்பதால் அண்ணாத்த படத்தை கொண்டாட காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.