அதை மாதிரியே இதை மட்டும் செஞ்சுடீங்கனா ரொம்ப நன்றிக்கடன் பட்டிருப்போம்! தமிழக அரசுக்கு இயக்குனர் பாரதிராஜா விடுத்த கோரிக்கை!
Bharathiraja request to tamilnadu vovernment
கொரோனோ அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டது.மேலும் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் திரைத்துறையில் பணியாற்றி வந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வருமானமின்றி பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டது. மேலும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்க அதிபர்கள் என பலரும் வருமானமின்றி பெரும் நஷ்டம் அடைந்தனர்.
இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் தளர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர், 75 நபர்களுக்கு மிகாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கினர். ஆனால் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடிகர் பாரதிராஜா அவர்கள், திரைத்துறை தொழிலாளர்கள் பட்டினியால் வாடுவதை கருத்தில் கொண்டு படப்பிடிப்பிற்கு அனுமதியளித்து கனிவை காட்டிய தமிழக முதல்வருக்கும், எங்கள் பிரச்சனைகளைக் கூர்ந்து கேட்டுக்கொள்ளும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றிகள் பல என தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது படப்பிடிப்புத் தளங்களுக்கு செல்ல அனுமதி தந்துள்ளீர்கள். இன்னும் சில வரைமுறைகளோடு எங்கள் திரையரங்குகளையும் இயங்க ஆவண செய்வீர்கள் எனக் காத்திருக்கிறோம். இதற்கு முன்னதே நாங்கள் வைத்திருக்கும் கோரிக்கைகளையும் பரிசீலிக்கக் கேட்டுக் கொள்வதோடு, திரையரங்க வரிவிகிதங்களையும் குறைத்து சினிமா வாழ வழிவகை செய்தால் அத்தனை ஆயிரம் கலைக் குடும்பங்களும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாவோம். திரையுலகம் மறக்க முடியாத ஒரு முதல்வரைப் பெற்றதென உயர்த்திப் பிடிப்போம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.