மனசாட்சி இருந்தா புரியும்! அதற்கெல்லாம் போராடுவீங்களா? நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல இயக்குனர்!
Bharathiraja support to surya
பரவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பட வேலைகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள சில படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. மேலும் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தையும் அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியிடவுள்ளதாக நடிகர் சூர்யா அறிக்கை விடுத்திருந்தார். இதற்கு தியேட்டர் அதிபர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த சிலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
சமீபகாலமாக ஒருதிரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மனசாட்சி உள்ளவர்ளுக்கு அது புரியும்.பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த மாற்று வழிதான் ஓ.டி.டி.
விரைவில் சில கட்டுப்பாடுகளுடன் தியேட்டரை திறக்க அனுமதி அளிப்பார்கள் என்று நம்புகிறோம். தியேட்டரில் 35 சதவிகிதம் முதல் 50 சதவீதத்துக்குள் சமூக இடைவெளியுடன் மக்களை அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவு இருக்கும். 50 சதவீதம் மக்களைஅனுமதித்தால்கூட ஒரு திரைப்படம் தியேட்டரில் எத்தனை வாரங்கள் திரையிடப்படும்? ஏற்கனவே நல்ல திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை.
சமீபநாட்களில் ஓ.டி.டி.க்கு எதிரான பிரச்சினையை சூர்யாவுக்கு எதிரான தனி நபர் பிரச்சினையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளது. பெரிய நடிகர்கள் படங்கள் ஓ.டி.டி.யில் வரக்கூடாது, திரையில்தான் வெளிவர வேண்டும் என்ற எண்ணம் வரவேற்க கூடியதுதான். அதேநேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல படங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதை திரையில் கொண்டு வர போராடுவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.