கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக என்னை தொந்தரவு செய்யாதீர்கள்; பரபரப்பை ஏற்படுத்திய தெலுங்கு நடிகை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக என்னிடம் துட்டு கேட்காதீர்கள் என்று பிரபல நடிகை மெஹரீன் கூறியுள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் நடித்துள்ளவர் நடிகை மெஹரீன். இவர் "கிருஷ்ணா காடி வீர பிரேமா" என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இந்நிலையில் கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக என்னிடம் நிதியுதவி கேட்காதீர்கள் என்று நடிகை மெஹரீன் கூறியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் கன மழையால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டள்ளது. அவர்கள் வாழ்வாதாரங்களுக்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளின்படி பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ முன்வருமாறு பிரபல தெலுங்கு நடிகை மெஹரீனிடம் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வேண்டுகோள் வைத்தனர். அதற்கு நடிகை மெஹரீன் எதற்காக என் பெயரை பயன்படுத்தி துட்டு கேட்கிறீர்கள். உதவ வேண்டும் என்றால் அவர்களாக செய்யட்டும், என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என கோபமாக கூறியுள்ளார்.