#Breaking: லியோ பட டிரைலரில் ஆபாச வார்த்தை விவகாரம்: "நானே பொறுப்பு" - மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்.! முழு விபரம் இதோ.!
#Breaking: லியோ பட டிரைலரில் ஆபாச வார்த்தை விவகாரம்: நானே பொறுப்பு - மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்.! முழு விபரம் இதோ.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இப்படத்திற்கு தணிக்கைக்குழு யுஏ தரச்சான்றிதழ் வழங்கி இருக்கிறது.
இப்படத்தில் நடிகர்கள் இளைய தளபதி விஜய், திரிஷா கிருஷ்ணன், அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மனோபாலா, ஜாபர் சித்திக், அபிராமி உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், டிரைலரின்படி நடிகர் விஜய் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் வில்லத்தனத்தில் மாஸ் காண்பித்து இருக்கின்றனர். விஜயின் மாறுபட்ட கதாபாத்திரம் விஸ்வரூபம் எடுக்கும்போது படம் திரையில் சூடேறும்.
இதற்கிடையில், படத்தின் டிரைலரில் நடிகர் விஜய் கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்ட இடத்தில் ஆபாச வசனம் ஒன்றை பேசி இருப்பார். அந்த வார்த்தை தற்போது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. சிலர் அதனை கண்டுகொள்ளாமல் விட்டாலும், அதனை பெருமையாக நினைத்து அதனையே பலரும் பேச தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில், "படத்திற்கு தேவைப்பட்டதால் டிரைலரில் அந்த வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. அப்பாவியான ஒருவர் தான் இருந்த அழுத்தமான மனநிலை சூழலில் பேசியுள்ளதை காட்சிப்படுத்தி இருக்கிறேன். அந்த வார்த்தையால் யாரின் மனது புண்பட்டாலோ, யாரேனும் கண்டனத்தை தெரிவித்தாலோ, அதற்கு முழு பொறுப்பு நானே.
அதற்கும் - நடிகர் விஜய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அந்த 6 நிமிட காட்சிகளை ஒரே காட்சியாக நாங்கள் படம்பிடித்தோம். காலையில் படப்பிடிப்பு தொடங்கும்போதே, வசனங்களை பார்த்துவிட்டு நான் கட்டாயம் அந்த வார்த்தையை பேச வேண்டுமா? என விஜய் கேட்டார்.
கதாபாத்திரத்திற்கு அவை தேவைப்படுகிறது என கூறி நானே விஜயை பேசவைத்தேன். அவர் பொதுவாக இயக்குனர் கூறும் விஷயங்களை செய்ய வேண்டும் என நினைப்பார். அதில் மறுப்பு சொல்ல விரும்பமாட்டார். இவ்விவகாரத்தில் தயக்கம் இருந்தும், என்னிடம் மீண்டும் கேட்டார். நான் கூறியதால் அதனை பேசினார்" என கூறினார்.
தமிழ் திரையுலகில் ஆபாச வார்த்தைகள் திரைப்படங்களில் அவ்வப்போது வந்து செல்வது சமீபத்தில் இயல்பாகிவிட்டது. திரைப்படங்களில் அவை சென்சார் போர்ட் மூலமாக எப்போதும் துண்டிக்கப்படும். ஆனால், டிரைலர் காட்சிகளில் அவை வெளிப்படையாக காண்பிக்கப்படும். தமிழில் நடிகர் விஜய் மட்டும் இவ்வாறான அவதூறு வார்த்தைகளை புதிதாக பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உச்ச நடிகர்களை புகைபிடிக்க வைப்பது, அவதூறான வார்த்தைகளை பேச வைப்பது இன்றைய இயக்குனர்களின் தனித்துவ அடையாளமாக மாறி இருப்பது நாம் நன்கு அறிந்த ஒன்றுதான் என்பதையும் மறுக்க இயலாது. படம் என்பது பொழுதுபோக்கு என்ற விஷயத்தை உணர்ந்தால் அனைத்தும் நலமே. அதனை மக்களுக்கு காட்சிப்படுத்தும் இயக்குனர்களும் சமூக பொறுப்போடு செயல்பட்டால் சரி.
ஆனால், இயக்குனர் லோகேஷ் மட்டும் பல இயக்குனர்களை போல அல்லாது, தனது எழுத்துக்கள்-வசனத்திற்கு தானே பொறுப்பு என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அவரின் செயல் பாராட்டத்தக்கதே எனவும் லோகேஷின் ஆதரவாளர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் லோகேஷுக்கு கண்டனமும் தெரிவிக்கின்றனர்.