நடிகை திரிஷா குறித்த பேச்சால் வெடித்த சர்ச்சை.! மன்சூர் அலிகானுக்கு காவல்துறை சம்மன்!!
நடிகை திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.! மன்சூர் அலிகானுக்கு காவல்துறை சம்மன்!!
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், லியோ படத்தில் திரிஷாவை பாலியல் தொந்தரவு செய்வது போன்ற காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு நடிகை த்ரிஷா, நடிகர் மன்சூர் அலிகான் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் மனித குலத்திற்கே அவப்பெயரை உண்டாக்குகிறார் என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நடிகர் மன்சூர் அலிகான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே மன்சூர் அலிகான் “நான் எப்பொழுதும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டு வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகிறார்கள்" எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், “நடிகை த்ரிஷா குறித்து நான் தவறாக எதுவும் பேசவில்லை. அவரைப் பாராட்டிதான் பேசினேன். என்னைப் பற்றி மக்களுக்கு தெரியும். தமிழ்நாடே என் பக்கம்" என மன்னிப்பு கேட்க மறுத்தார்.
இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது இருபிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நாளை(23.11.2023) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என மன்சூர் அலி கானுக்கு ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.