மூக்குத்தி அம்மன் குறித்து வெளியான புதிய தகவல்! நயன்தாராவின் தரிசனத்திற்காக காத்துக்கிடக்கும் ரசிகர்கள்!
ஆர்.ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் வெளிவரவிருப்பதாக கூறப்படுகிறது.

ஆர்.ஜே. பாலாஜி நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். இதனை அவருடன் என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதில் நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மெளலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து, தியேட்டர்கள் அனைத்தும் திறக்கப்பட்ட பிறகு மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் மும்பையிலிருந்து ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனை செய்துவந்த ஆர்.ஜே.பாலாஜி, தான் 20 நாட்கள் வர்ணனை செய்ய போவதில்லை என்று நேற்று தெரிவித்துள்ளார்.மேலும் மூக்குத்தி அம்மன் பட புரமோஷனுக்காக சென்னை செல்வதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தியேட்டர்கள் திறக்க தாமதமாவதால் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் படம் தீபாவளியை முன்னிட்டு வெளிவர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.