இராஜராஜ சோழனை சிறுவயதிலேயே நேரில் பார்த்துள்ளேன் - சோழ தேசத்தில் சோழனாய் கர்ஜித்த நடிகர் பார்த்திபன்..!
இராஜஇராஜ சோழனை சிறுவயதிலேயே நேரில் பார்த்துள்ளேன் - சோழ தேசத்தில் சோழனாய் கர்ஜித்த நடிகர் பார்த்திபன்..!
கல்கியின் நாவலை தழுவி, மணிரத்தினம் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பில், Lyca Productions தயாரிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்தீபன், கார்த்திக், பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலரும் நடித்துள்ளனர்.
செப் 30 ஆம் தேதியான இன்று படம் திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் பார்த்தீபன் தஞ்சாவூரில் உள்ள திரையரங்கில் வந்து படம் பார்ப்பதாக கூறியிருந்தார். அதனைப்போல, இன்று தஞ்சாவூர்க்கு வந்த பார்த்தீபன் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்தீபன், "பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு வணக்கம். தஞ்சை மண்ணுக்கு மதிப்பிற்குரிய வணக்கம். பேரன்பிற்குரிய மன்னர் ராஜராஜ சோழன் அவர்களுக்கும் வணக்கம். பொன்னியின் செல்வன் படத்தை தஞ்சை மண்ணில் பார்ப்பது பெருமையான விஷயம். 1973 மார்ச் 31 ம் தேதியில் இராஜஇராஜசோழனை குட்டி பையனாக நான் தஞ்சை மண்ணிலேயே பார்த்துள்ளேன்.
இந்த படத்தில் நானே நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் சினிமாவின் தீவிர ரசிகன். நல்ல சினிமாவை வரவேற்போம். பொன்னியின் செல்வனை வெற்றிபெற செய்வோம். பொன்னியின் செல்வனில் நடித்ததை விட சோழ தேசத்தில் வந்து படம் பார்த்ததை பெருமையாக கருதுகிறேன்.
கல்கிக்கு ஆண்களை விட பெண் ரசிகைகள் அதிகம். அதனாலேயே திரையரங்கில் பெண்கள் கூட்டமாக இருக்கிறது. 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலுக்கு இன்று வரை வெற்றி கிடைக்கிறது. நான் இந்த படத்தில் சிறிய பாகம் தான் நடித்துள்ளேன். இவ்வுளவு பெரிய படத்தில் நான் சிறிய கதாபாத்திரம் நடித்திருந்தாலும் மகிழ்ச்சியே. கல்கியின் எழுத்து கடல் என்பது உறுதியாகிறது" என்று பேசினார்.