மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினிகாந்த்! ஆனால் ஒருவாரம் ரெஸ்ட்! அரசியல் பயணம் எப்போ.?
மருத்துவமனையிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சூப்பர் ஸ்டார் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் இல்லை. ரத்த அழுத்தம் சீராகும்வரை ரஜினிகாந்த் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ரஜினிகாந்தின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ஒருவாரம் ஓய்வெடுக்கவேண்டும் எனவும், ரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும், மன அழுத்தம் இல்லாத பணிகளை மட்டுமே மேற்கொள்ளவேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது.
ரஜினிகாந்த் ‘அடுத்த மாதம் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்று கடந்த 3-ந்தேதி அறிவித்து இருந்தார் ரஜினி. ஆனால் தற்போது மருத்துவர்கள் ரஜினியை ஒரு வாரத்திற்கு ஓய்வெடுக்கவேண்டும் என கூறியதால் ஜனவரிக்கு பிறகே கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.