சென்னை வெள்ளபாதிப்பு.. அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசையே காரணம்! - சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டு!
சென்னை வெள்ளபாதிப்பு.. அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசையே காரணம்! - சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டு!
மிக்ஜம் புயலால் நேற்று முன்தினம் சென்னையில் ஒரே நாளில் பெய்த அதிக கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இன்னும் பலர் வெள்ள நீரில் சிக்கிக் கொண்டு, அத்தியாவசிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "தொடர்ந்து பத்து ஆண்டுகளாக வெள்ளப்பெருக்கின் போது வார கணக்கில் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் முழங்கால் அளவு நீரால் சூழப்படுவதுடன், 100 மணி நேர மின்சார தடையையும் எதிர்கொள்கிறோம். இந்தப் பகுதியை ஏரியா அல்லது பள்ளமோ கிடையாது. சென்னையின் பல பகுதிகளை விட எங்கள் பகுதியில் நிறைய குளங்கள் நல்ல நிலையில் இருப்பதுடன் வெட்ட வெளிநிலங்களும் இருக்கின்றன. மிகச் சரியாக இதற்கு குளப்பாக்கம் என பெயரிட்டு இருக்கின்றனர்.
ஆனால், அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகத்தால் மழை நீரும் கழிவுநீரும் ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது. இதனால் ஒவ்வொரு முறையும் எங்கள் குடியிருப்புகளில் ஆறு போல் மழை நீர் தாக்குகிறது. இந்த நேரத்தில் யாராவது நோய்வாய்படுவதும் தீவிரமாக பாதிக்கப்பட்டு மரணமும் ஏற்படுகின்றன. என்னிடமே ஒரு படகும் சில துடுப்புகளும் நிரந்தரமாக உள்ளன. என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்து வருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.