முருகதாஸ் வீட்டு கதவை பலமுறை தட்டிய போலீசார்! என்ன நடந்தது? முருகதாஸ் விளக்கம்!
Sarkar director murugadhas explanation about police arrest
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியான போதே படம் முழுவதும் அரசியல்தான் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு படம் வெளியானது. படம் முழுவதும் அரசியல் கலந்த மாஸாக இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம்.
இந்நிலையில் சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்காவிட்டால் சர்க்கார் படம் தடைசெய்யப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் மதுரை அண்ணாநகரில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில், சர்கார் படம் வெளியாகியுள்ள தியேட்டருக்கு எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை காசி தியேட்டர் உள்ளே நுழைந்த அதிமுகவினர் அங்கிருந்த பேனர்களை கிழித்து வீசினர். இந்நிலையில் இயக்குனர் முருகதாஸை கைதுசெய்ய போலீசார் அவர் வீட்டிற்கு சென்றிருப்பதாக சர்க்கார் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நாங்கள் முருகதாஸை கைதுசெய்ய செல்லவில்லை, எப்போதும்போல ரோந்துப்பணிக்காகத்தான் சென்றோம் என காவல் துறையில் விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது இதுபற்றி இயக்குனர் முருகதாஸ் அங்கு நடந்த சம்பவம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நள்ளிரவில் காவல்துறையினர் எனது வீட்டிற்கு வந்து கதவை பலமுறை தட்டியதாகவும், நான் வீட்டில் இல்லை என்று தெரிந்த பின்புதான் போலீசார் தனது வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் நான் நலமாக உள்ளேன் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.