சீறும் புலியாய் பிரபாகரன் வேடத்தில் பாபி சிம்ஹா! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Seerum pulli first look
நவம்பர் 26, 1954 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழராய் பிறந்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். தமிழீழ விடுதலைக்காக தன் கடைசி மூச்சுவரை போராடி மக்களுக்காக உயிரை விட்டவர் பிரபாகரன்.
1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல்தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
உலகத் தமிழர்கள் அவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப்பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.
தமிழ் தேசிய தலைவராக தமிழர்களாலும் அளிக்கப்படும் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்குனர் வெங்கடேஷ் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபாகரனின் பிறந்தநாளான இன்று 'சீறும் புலி' என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் பாபி சிம்ஹா வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்ற தோற்றத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.