திரைப்படமாகிறது மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை! பிரபல இயக்குனர் அதிரடி முடிவு!
Sushanth biography became as movie
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு எதிரான படத்தில் நடித்த இவரே இத்தகைய விபரீத முடிவை எடுத்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் பிரபல வாரிசு நடிகர்களின் ஆதிக்கம்தான் என கருத்துக்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் நிகில் ஆனந்த் இயக்க உள்ளார். இதற்காக அவர் சுஷாந்தின் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து பேச இருக்கிறார். இதுபற்றி நிகில் ஆனந்த் கூறுகையில், நடிகர் சுஷாந்த் சிங் இன்று நம்முடன் இல்லை என்பதை நினைக்கும் போது மிகவும் வலியாக உள்ளது. சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சுஷாந்த் ஒரு உதாரணம். அவர் நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. அவர் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பார் என நம்புகிறேன்.
மேலும் இந்த படம் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கண்டிப்பாக இருக்கும். அவரை சினிமாவில் என்றும் நிலைத்து நிற்க வைப்பதே எனது கனவு. அவரது இந்த வாழ்க்கை வரலாற்று படம் சினிமாவில் உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களுக்குள் மாற்றத்தை கொண்டுவரும் வகையிலும் இருக்கும் என நம்புகிறேன். வாரிசு நடிகர்கள் மட்டுமின்றி அனைத்து திறமையானவர்களுக்கு பாலிவுட் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மேலும் இன்னும் இரு மாதங்களில் கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும். நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வில் ஈடுபட உள்ளோம். மேலும் இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய முயற்சி செய்கிறோம் என நிகில் ஆனந்த் கூறியுள்ளார். இப்படம் கிரவுட் பண்ட் முறையில் பணம் பெற்று தயாராக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.