பீதியை கிளப்பும் புதிய வைரஸ்.! பிரிட்டனில் ஒரே நாளில் 33,364 பேர் பாதிப்பு.! சென்னையில் 15 பேர் தனிமைப்படுத்தல்.!
பிரிட்டன் நாட்டில் புதியவகை கொரோனா இரண்டாம் பரவல் ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் புதிதாக 33,364 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று பரவி வரும் நாடுகளின் எண்ணிக்கையில் பிரிட்டன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், பிரிட்டன் நாட்டில் புதியவகை கொரோனா இரண்டாம் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் வீரியம் அதிகமாக இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் முன்னதாக தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து கொரோனா வைரஸின் புதிய வகை திரிபுகள் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுடனான போக்குவரத்தை இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய நாடுகள் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளன.
தற்போது பிரிட்டனில் மாற்றமடைந்த புதிய வைரஸ் (New Strain) பரவி வருகிறது. இந்த வைரஸ் 70 சதவிகிதம் வேகமாகப் பரவுகிறது என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டன் மட்டுமன்றி தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப் புதிய வைரஸ் தென்படுகிறது.
இந்தநிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் நேரடியாக சென்னை விமான நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் மீண்டும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து டெல்லி வழியாக இன்று சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை பரிசோதனை செய்ததில், இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று காலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், லண்டனில் இருந்து வந்த 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தனி மனித இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.