சளி, காய்ச்சல், சுவாசக் கோளாறு மட்டும் கொரோனா அறிகுறிகளா.? மருத்துவர் எச்சரிக்கை!
Corona symptoms
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் அதிகப்படியானோருக்கு இரைப்பை மற்றும் குடல் சாா்ந்த பாதிப்புகள் இருப்பது சா்வதேச ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, தடுப்பு மருந்துகளைக் கண்டறிவதற்கு பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. சளி, காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்றவைதான் கொரோனாவின் பொதுவான அறிகுறிகள் என இதுவரை கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், அதைத் தாண்டி செரிமான பாதிப்புகளும் கரோனாவால் ஏற்படலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களிடம் காணப்பட்ட அறிகுறிகளை ஆய்வு செய்தபோது அதிலிருந்து பல்வேறு புதிய விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் கொரோனா பாதித்த 50 சதவீத நோயாளிகளுக்கு செரிமான பாதிப்புகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது என கூறியுள்ளார்.
குறிப்பாக பெரும்பாலானோா் பசியின்மையாலும், வயிற்றுப்போக்காலும் பாதிக்கப்பட்டுள்ளனா். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலியும் காணப்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு சுவாசக் கோளாறுகளே இல்லாமல் வெறும் செரிமானப் பாதிப்புகள் மட்டும் கண்டறியப்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்.