படுத்ததும் உறங்க வேண்டுமா? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!
Paati vaithiyam for better sleep at night
இன்றைய நவநாகரீக உலகில் குடும்ப சுமை, வேலைப்பழு, உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்களால் இரவில் உறக்கம் வராமல் தவிப்போம். இளைய தலைமுறையினர் பலரும் இரவில் தூக்கம் வராமல் சமூக வலைதளங்களை பயன்படுத்திக்கொண்டு பெருமையாக எனக்கு இன்சேம்னியா என பதிவிட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் மனிதன் ஒரு குறைந்தபட்சம் 8 மணி நேரம் உறங்குவது மிகவும் முக்கியம். அப்படி உறங்குவதன் மூலமே உடலின் சுழற்சி ஒரே சமநிலையில் இருக்கும். நமக்கும் ஆசை தான் சீக்கரம் தூங்கி சீக்கிரம் எழ வேண்டும் என்று.
ஆனால் எப்படி தூங்குவது?
சுவாரஸ்ய டிப்ஸ்கள்
சிலர் எண்களை நூறிலிருந்து தலைகீழாக எண்ணிக்கொண்டே வந்தால் தானாக தூக்கம் வரும் என சொல்வர். ஆனால் வராத தூக்கத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துப் பார்த்தும் வரவில்லையா! இனி கவலையை உதறித்தள்ளுங்கள். இருக்கவே இருக்கிறது நம் முன்னோர்கள் நமக்கென விட்டுச்சென்ற பாட்டிவைத்தியம். நம்ம பாரம்பரிய பாட்டி வைத்தியத்தின் மூலம் எப்படி படுத்தவுடன் தூக்கம் வரவைப்பது என பார்ப்போம்.
மாட்டுப் பால்
இந்த பாட்டி வைத்தியம் கண்டிப்பாக பலனளிக்கக்கூடிய அதே நேரம் எளிதான ஒன்று. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மாட்டுப் பால் இரவில் படுக்கும் முன்பு குடித்தால் சீக்கிரம் தூக்கம் வரும். ஏனெனில் அதில் மெலடோனின் மற்றும் ட்ரைப்டோபோஃன் என்ற ஹார்மோன்கள் அடங்கியுள்ளன. அதுவும் மாலையில் கறந்த பால் என்றால் இன்னும் பலன் அதிகமாக இருக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் இயற்கையாகவே இரவில் சிறந்த தூக்கத்தை தரக் கூடியது. முதியோர்கள் அதிக இரத்த அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிக்கும் போது வாழைப்பழங்களை சாப்பிட்டால் எளிதில் தூக்கம் வரும். அதுவும் மரபணு மாற்றப்பட்ட பழங்களை தவிர்த்து தினமும் வெவ்வேறு வகை பழங்களை சாப்பிடலாம்.
வாதுமை கொட்டை
கிராமப்புறங்களில் கிடைக்கும் இந்த வாதுமை கொட்டையை உங்களுக்கு மிகவும் பிடிக்குமா?. அப்போ உங்களுக்கு தூக்கமும் நன்றாக வரும். இதில் மெலடோனின் மற்றும் செரோடோனின் என்ற இரண்டு பொருட்கள் உள்ளது. இந்த இரண்டுமே உங்களுக்கு நல்ல உறக்கம் தரக் கூடியது.
சீரகத்தண்ணீர்
தண்ணீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து, அதோடு கொஞ்சம் தேன் கலந்து இரவில் குடித்துவர தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
தயிர்
எப்போதும் காலையில் தயிர்சாதம் சாப்பிட்டால் அலுவலகத்தில்/ பள்ளியில் தூக்கம் அப்படி வரும். தூக்கமின்மை பிரச்சனை தீர தயிர் ஒரு நல்ல தீர்வாக உள்ளது. தினமும் உணவுடன் தயிரை உட்கொண்டு வந்தால் இரவில் உறக்கம் நன்றாக வரும்.
வெங்காயம்
வெங்காயத்தின் தோலை உரித்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அளவாக தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டி, வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.
வேப்பிலை
வேப்பிலை இயற்கையாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தவை. வேப்பிலையை எடுத்து மிதமான சூட்டில் நன்கு வறுத்து அதை தலையில் வைத்து உறங்கினால் நன்றாக தூக்கம் வரும்.
சுரைக்காய்
சுரைக்காயை அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து அதே அளவிற்கு நல்லெண்ணெய் கலந்து இரவு உச்சந்தலையில் நன்றாக தேய்த்து வந்தால் தூக்கமின்மை குறையும்.
அசைவம்
அசைவ உணவு வகைகளில் முட்டை, மீன் வகைகளைச் சாப்பிடுவதன் மூலமும் நன்கு உறக்கம் கிடைக்கும். இதை தவிர்த்து உணவு பழக்க வழங்கங்களையும் சரியாக கடைபிடித்து வர வேண்டும். சாப்பிட்டவுடன் உறங்க செல்லாமல் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி/ யோகா செய்தோ அல்லது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவழித்துவிட்டு தினமும் சரியான நேரத்தில் தூங்க செல்வது, உணவில் கீரையை சேர்த்துக்கொள்வது போன்றவற்றை பின்பற்றினால் தூக்கம் தானாக வரும்.
இதனை பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள். மேலும் இதுபோன்ற தகவல்கள் செய்திகளை உடனுக்குடன் பெற நமது கணக்கை பின்தொடருங்கள். நன்றி...!