திருப்பதியில் காணாமல் போன 5 வயது சிறுவன் மைசூரில் மீட்பு! நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்.!
திருப்பதியில் காணாமல்போன 5 வயது சிறுவன் மைசூரில் மீட்பு! நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்!!
திருப்பதி அருகே தாமிநேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடரமணா. அவருக்கு கோவர்தன் என்ற 5 வயது மகன் உள்ளார். வெங்கடரமணா அவரது மனைவியுடன் திருமலையில் பக்தர்களுக்கு திருநாமம் இடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மாலை 6 மணியளவில் அவர்கள் வேலையில் மும்முரமாக இருந்தபோது, பெண் ஒருவர் அங்கு விளையாடிக்கொண்டிருந்த கோவர்தனை கடத்தி சென்றுள்ளார்.
இந்நிலையில் நீண்ட நேரமாக அங்கு மகனை காணாததால் பதறிப்போன வெங்கடரமணா அப்பகுதி முழுவதும் தேடியுள்ளார். ஆனால் மகன் கிடைக்காததால் அவர்கள் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பின்னர் போலீசார் அங்கு மலையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது மர்ம பெண் ஒருவர் சிறுவனை கடத்தி பேருந்து மூலம் திருப்பதிக்கு அழைத்து சென்றது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண் சிறுவனை திருப்பதியில் இருந்து ரயில் மூலம் மைசூருக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. பின்னர் அங்கு விரைந்த போலிசார் சிறுவனை கடத்தி சென்ற பெண்ணை கைது செய்து சிறுவனை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுவனை கடத்திய பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.