ஆபரேஷன் கங்கா: இந்திய அரசு அதிரடி..! டெல்லிக்கு புறப்பட்ட 9வது விமானம்..!
ஆபரேஷன் கங்கா: இந்திய அரசு அதிரடி..! டெல்லிக்கு புறப்பட்ட 9வது விமானம்..!
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் கங்கா நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
உக்ரைன் நாட்டில் கடந்த 5 நாட்களாகவே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. இந்தநிலையில், போர்க்களமாக மாறியிருக்கும் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர். ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
நேற்று காலையில் 249 மாணவர்களுடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 5-வது விமானம் டெல்லி வந்து சேர்ந்தது. அதேபோல் ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களுடன் 6-வது விமானம் டெல்லி வந்து சேர்ந்தது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.