தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்ற தீரம்மிக்க பெண்: 94 வயதில் உலக சாதனை..!
தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்ற தீரம்மிக்க பெண்: 94 வயதில் உலக சாதனை..!
இந்தியாவை சேர்ந்த பகவானி தேவி தாகர் என்னும் 94 வயதான ஓட்டப்பந்தய வீராங்கனை சமீபத்தில் பின்லாந்து நாட்டின் தம்பேர் நகரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்றார். பகவானி தேவி 100 மீட்டர் தூரத்தை 24.74 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றதாக இந்திய விளையாட்டு அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
மேலும், ஓட்டப்ந்தயம் மட்டுமன்றி குண்டு எறிதல் போட்டியிலும் வெண்கலப் பதக்கத்தை வென்று அநைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்காக நடத்தப்படும் போட்டித் தொடராகும். இந்த போட்டிகள் கடந்த ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை பின்லாந்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பகவானியின் சாதனைகள் பல தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அனுராக் தாக்கூர், ஹர்தீப் சிங் பூரி மற்றும் பியூஷ் கோயல் உள்ளிட்ட அமைச்சர்கள் அவரை பாராட்டியுள்ளனர். பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகம் அவரது காலடியில்! பின்லாந்தில் நடந்த உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் வென்றதற்காக நாங்கள் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். 94 வயதில் என்ன சாதனை!” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹரியானா முதல்வர் மன்ஹோர் லால் கட்டர் உள்ளிட்டோரும் பகவானி தேவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.