AnyDesk செயலியை பயன்படுத்தி, ரூ.82 இலட்சம் மோசடி.. மேக் மை ட்ரிப் ரீபண்ட் பெயரில் சம்பவம்.! மக்களே ஜாக்கிரதை.!!
AnyDesk செயலியை பயன்படுத்தி, ரூ.82 இலட்சம் மோசடி.. மேக் மை ட்ரிப் ரீபண்ட் பெயரில் சம்பவம்.! மக்களே ஜாக்கிரதை.!!
தொழிலதிபரிடம் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி போல பேசி, Any Desk செயலி உதவியுடன் மோசடி கும்பல் மொத்தமாக ரூ.82 இலட்சம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர், கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதியன்று காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரில், "மேக் மை ட்ரிப் இணையத்தில் நான் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்தேன். ஆனால், நான் சுற்றுலா செல்ல இயலாத காரணத்தால் பணத்தை திரும்ப பெற விரும்பினேன்.
இதற்காக, அந்த செயலியின் சேவை மைய எண்ணை இணையவழியில் தேடியபோது, ஒரு அலைபேசி எண் கிடைத்தது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசுகையில், மறுமுனையில் பேசியவர் படிவத்தை இணையவழியில் நிரப்பி அனுப்ப கூறினார். நானும் அதனை அனுப்பிய நிலையில், Any Desk என்ற செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்ய கூறினார்.
அதனை பதிவிறக்கம் செய்து, அவர் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பிய இணைப்பை (Link) அழுத்தியபோது, எனது வங்கிக்கணக்கில் இருந்து அவர்கள் ரூ.4 இலட்சம் பணத்தை திருடிவிட்டனர். அவர்கள் பணத்தை திருடும் போது எனது அலைபேசியை ஒன்றுமே செய்ய இயலவில்லை. அது அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் அபிலேஸ் குமார் (வயது 22), கூட்டாளி ராஜு அன்சாரி (வயது 22) ஆகியோரை வைத்து கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், இதே மோசடி பாணியில் பல்வேறு நபர்களிடம் மொத்தமாக ரூ.82 இலட்சம் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
Any Desk செயலி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும். இந்த செயலி மூலமாக நமது அலைபேசி மற்றும் கணினி போன்ற சாதனங்களை நமது அனுமதியுடன் மட்டுமே உபயோகம் செய்ய இயலும். ஆனால், விபரம் புரியாமல் மோசடி கும்பலுக்கு ஒருமுறை அனுமதி வழங்கிவிட்டால், அதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளைக்கும்பல் தனது கைவரிசையை காண்பிக்கும்.
இதுபோன்ற செயலிகள் பெருநிறுவனங்களில் கணினி சார்ந்த தொழில்நுட்ப பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இன்றளவில் மோசடி கும்பல் அதனை தனக்கான வாய்ப்பாக பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.