சாலையில் சென்ற பெண்ணை கடித்துக் குதறிய பிட் புல் ரக நாய்.. உரிமையாளர் மீது வழக்கு..!
சாலையில் சென்ற பெண்ணை கடித்துக் குதறிய பிட் புல் ரக நாய்.. உரிமையாளர் மீது வழக்கு..!
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் பிட்புல் ரக நாய் கடித்ததில் 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான உள்ளார்.
குருகிராமில் இருக்கும் சிவில் லைன்ஸ் என்ற பகுதியயை சேர்ந்தவர் வினித் சிகாரா. இவர் செல்ல பிராணியாக பிட் புல் ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். வினித் நேற்று தனது நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நாயின் கழுத்தில் இருந்த சங்கிலியை சிறிது நேரம் அவிழ்த்து விட்டுள்ளார்.
அப்போது அந்த பிட்புல் ரக நாய், அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முன்னி என்ற பெண் மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நாயிடம் இருந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தற்போது உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாய் கடித்து உயிருக்கு போராடி வரும் பெண் முன்னி அந்த பகுதியில் வீட்டு வேலை செய்பவர் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், அந்த பெண்ணின் உறவினர் நாயின் உரிமையாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், நாயின் உரிமையாளர் வினித் சிகாரா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என குருகிராம் பகுதி ஏசிபி பிரீத் பால் சிங் சங்வான் கூறியுள்ளார்.
மேலும் கடந்த மாதம் இதே குருகிராம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சுசீலா திரிபாதியை அவர் மகன் வளர்த்த பிட் புல் ரக நாய் கடித்து குதறியது. இதில் அவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இந்த பிட் புல் ரக நாய் மிகவும் ஆபத்தான வளர்ப்பு பிராணி என்றும் இது வேட்டை நாய் ரகத்தை சேர்ந்தது என்பதால் இதை வளர்ப்பது அவ்வளவு நல்லதல்ல எனவும் விலங்கியல் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.