கொரோனாவுக்காக பிரதமர் உட்பட அனைத்து எம்.பி.க்களின் ஊதியத்தில் பிடித்தம்! அமைச்சரவை ஒப்புதல்!
All mp's salary reduced for corona
கொரோனா நிவாரண நிதிக்காக ஓராண்டுக்கு பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்.பி.க்களின் ஊதியத்தில் 30 சதவிகிதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொளி காட்சி மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில், கொரோனா பாதிப்பு எதிரொலியாக பிரதமர் உள்பட எம்.பி.க்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் மற்றும் ஆளுநர்களின் ஊதியத்திலும் 30% பிடித்தம் செய்யப்படும்.
எம்.பிக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியும் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தம் செய்யப்படுகிறது.ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.பிக்களின் சம்பளத்திலும் பிடிக்கப்படும்.ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.
இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் அரசுக்கு ரூ.7,900 கோடி மிச்சப்படும். இந்த நடைமுறை ஏப்ரல் 1ந்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.