பலத்த காற்றுடன் இன்று கரையை கடக்கிறது அம்பன் புயல்! முன்னெச்சரிக்கை பாதுகாப்புகள் ஏற்பாடு!
Amban cyclone lies in bay of bangladesh
வங்கக்கடல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியானது தாழ்வு மண்டலமாக மாறி அதிதீவிரமடைந்து பெரும் புயலாக உருவெடுத்துள்ளது. அம்பன் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மேற்கு வங்க மாநிலம் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே இன்று
பிற்பகல் அல்லது மாலை கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அப்போது மணிக்கு 155 முதல் 165 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக 185 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்காளத்தின் கரையோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் எனவும், கடுமையான சேதம் ஏற்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சில அண்டை மாநிலத்தின் கடலோர பகுதிகளிலும் பாதிப்பு இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மற்றும் மேற்குவங்காளத்தில் கடலோர பகுதிகளில் வசித்துவந்த சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் மீனவர்கள் வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பாதுகாப்புபணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் உள்ளது.