அமெரிக்கா சாப்ட்வேர் எஞ்சினியர், போலி திருமண வலைத்தளம்.. பெண்களை குறிவைத்து மோசடி.!
அமெரிக்கா சாப்ட்வேர் எஞ்சினியர், போலி திருமண வலைத்தளம்.. பெண்களை குறிவைத்து மோசடி.!
திருமணம் ஆகாத இளம்பெண்களை குறிவைத்து ஏமாற்றிய இளைஞர், போலியாக திருமண தகவல் வலைத்தளத்தை செயல்பாட்டில் வைத்திருந்ததும் அம்பலமாகியுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர், கைலாசபுரத்தை சேர்ந்தவர் சித்ரா. இவர் சித்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "தெலுங்கு மேட்ரிமோனியில் வரன் இருப்பதாக கூறி, என்னிடம் நபரொருவர் ரூ.2.40 இலட்சம் மோசடி செய்துவிட்டார்" என்று கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில், மோசடியில் ஈடுபட்ட கர்ணம் பிரசாத் (வயது 42) என்பவர் கைது செய்யப்பட்டார். கர்ணம் பிரசாத்தின் தந்தை காவல் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றதால், வாரிசு அடிப்படையில் கர்ணம் பிரசாத்துக்கு அரசுப்பணி கிடைத்துள்ளது. இவர் கால்நடை மருத்துவத்துறையில் கடந்த 2012 ஆம் வரை பணியாற்றி, பின்னர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
அதன்பின்னர், வருமானமின்றி தவித்த கர்ணம் பிரசாத், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மதுபானம் குடிக்க பணம் தேவைப்படுவதால், மோசடி செய்து பணத்தை பெரும் எண்ணத்திற்கு வந்துள்ளார். கடந்த 2019 ஆம் வருடம் சித்தூர் கைலாசபுரத்தை சேர்ந்த சித்ராவுடன் இணையவழியில் பழகிய கர்ணம் பிரசாத், நான் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எனக்கு திருமணம் ஆகவில்லை,உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து, கடந்த வருடத்தில் அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்திருப்பதாகவும், அமெரிக்க கரன்சி கொண்டு வந்துள்ளதால் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துவிட்டார்கள். ரூ.2.50 இலட்சம் கொடுத்தால் விடுவிப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். நீ எனக்கு ரூ.2.50 இலட்சம் அனுப்பினால், நேரில் வந்து வெளிநாட்டு கரன்சியை மாற்றி தருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய சித்ராவும் தன்னிடம் இருந்த ரூ.2.40 இலட்சம் பணத்தை வங்கிக்கணக்கு வாயிலாக செலுத்திய நிலையில், பணம் பெற்றதும் செல்போன் ஸ்விச் ஆப் ஆகியுள்ளது. இதன்பின்னர் மோசடியை உணர்ந்து கொண்ட சித்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இதனைப்போல தெலுங்கு மேட்ரிமோனி என்ற போலி பக்கத்தை உருவாக்கி, திருமணம் ஆகாத பெண்களுக்கு வரன் அமைத்து கொடுப்பதாக நபருக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 இலட்சம் வரை வசூல் செய்துள்ளார். கர்ணம் பிரசாத்திடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.