குடிமகன்களுக்கு குஷியான செய்தி.!! கர்நாடகத்தில் இன்று முதல் மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளை திறக்க அனுமதி!
bar will open in karnataka
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மதுபான கடைகள், மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் மாநில அரசுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நாட்டின் பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இந்தநிலையில், கர்நாடக மாநிலத்தில் மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கு சில வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டு உள்ளது.
அதாவது, மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். உடல்வெப்ப நிலையை பரிசோதிக்கும் கருவிகள் மற்றும் கிருமிநாசினி திரவத்தை நுழைவுவாயிலில் வைக்க வேண்டும். அதேபோல் பார், கேளிக்கை விடுதி ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற கூடாது.
அதேபோல் பார், கேளிக்கை விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும். உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி பாதைகள் அமைக்க வேண்டும். வாடிக்கையாளர் சென்ற பிறகு அவர்கள் இருந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.