ஆளுநர் வெறும் பொம்மையா? அரசுத் தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சை கேள்வி.!
bihar public service commition - governer question
இந்திய அரசியலமைப்பின் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் மிகவும் உயர்வான பதவியாக கருதப்படும் ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு உண்டான தகுதிகள், பணிகள், கடமைகள் குறித்தும் அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வில் ஆளுநர் வெறும் பொம்மையா என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் இக்கேள்விக்கு ஆறு மதிப்பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் என்பவர் வெறும் பொம்மைதானா? இந்தியாவில் மாநில அரசியலில் ஆளுநரின் பங்கு என்ன? குறிப்பாக, பீகார் மாநிலத்தை முன்வைத்து விமர்சன ரீதியாக ஆராயுங்கள். என கேட்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து பீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் கருத்து கேட்டபோது, "இதற்கு வினாத்தாளை உருவாக்கிய ஆசிரியர்களே பொறுப்பு. ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் யாருக்கும் வினாத்தாளைப் பாரக்கும் அதிகாரம் இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.
சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த வினா ரத்து செய்யப்படப்போவதில்லை. மாறாக, தேர்வர்கள் அளித்த பதிலுக்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.