குடிநீர், கல்வி போன்றவை இலவச திட்டங்கள் என்று கூற முடியுமா?... சுப்ரீம் கோர்ட் கேள்வி...!
குடிநீர், கல்வி போன்றவை இலவச திட்டங்கள் என்று கூற முடியுமா?... சுப்ரீம் கோர்ட் கேள்வி...!
இலவச திட்டங்களுக்கு எதிரான வழக்கில் மாநில அரசுகளை எதிர் மனுதாரராக சேர்க்குமாறு, ஆர்.எஸ் பாரதி திமுக சார்பில் அளித்த மனுவில் கல்வி, குடிநீர், குறைந்தபட்ச மின்சார அலகுகள் போன்ற வாக்குறுதிகளை இலவசங்கள் என கூற முடியுமா என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில் மத்திய அரசை மட்டுமே எதிர்மனுதாரராக சேர்த்துள்ளார். ஆனால், மாநிலத்துக்கான திட்டங்களை மாநில அரசுகள்தான் செயல்படுத்தி வருகிறது. இந்த வழக்கு நாடுமுழுதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வழக்காக இருக்கிறது. எனவே, மாநில அரசுகளை மனு தாரர்களாக சேர்க்க வேண்டும் எனவும், திமுகவையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழு அமைத்து மாநில அரசுகளின் பொருளாதார நிலையை ஆராய்ந்து, எவ்வளவு இலவசங்கள் வழங்கலாம் என உறுதி செய்ய வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். திமுகவின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கில் திமுகவை எதிர்மனுதரராக இணைக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும், தேர்தல் அறிக்கைகளில் வெளியிடப்படும் இலவசங்களை வைத்து மட்டுமே தேர்தல்களில் யாரும் வெற்றி பெறுவதில்லை எனவும், இலவசங்களை தேர்தல் அறிக்கையில் கூறி தோற்றுப்போன கட்சிகளும் இருக்கறது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
கல்வி, குடிநீர், குறைந்தபட்ச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளை இலவசங்கள் என்று சொல்ல முடியுமா எனவும், நுகர்வோர் பொருட்கள் மற்றும் இலவச மின் சாதனங்களை நலத்திட்டங்கள் என கூற முடியுமா என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இலவசங்களை சிலர் பண விரயம் என்று கூறுவர், சிலர் நலத்திட்டம் என்று கூறுகின்றனர் என்று கூறிய அவர், ஆதரவோ, எதிர்ப்போ முதலில் அனைத்து தரப்பு கருத்துகளையும் சனிக்கிழமைக்குள் சமர்ப்பிக்க ஆணையிட்ட சுப்ரீம் கோர்ட், வழக்கு விசாரணையை வரும் திங்கட் கிழமைக்கு ஒத்திவைத்தது.