40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை.! மீட்பு பணிகள் தீவிரம்.!
40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை.! மீட்பு பணிகள் தீவிரம்.!
டெல்லியில் உள்ள கேஷபூரில் உள்ள டிஜேபி ஆலையின் (டெல்லி ஜல் போர்டு) ஆழ்துளை கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்துள்ளது. 40 அடி ஆழமுள்ள அந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது குறித்து விகாஸ்புரி காவல் நிலையத்திற்கு நள்ளிரவு ஒரு மணியளவில் தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் கிடைத்தவுடன் 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தேசிய பேரிடர் மீட்புக் குழு அவர்களுடன் இணைந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
துணை போலீஸ் கமிஷனர் (டெல்லி மேற்கு) விசித்ரா வீர் கூறுகையில், "தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத் துறையும் தேசிய பேரிடர் மீட்பு குழுவும் இணைந்து குழந்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.", என்று தெரிவித்துள்ளார்.
டிஎஃப்எஸ் தலைவர் அதுல் கார்க் கூறுகையில், "தேசிய பேரிடர் மீட்பு குழு, குழந்தை விழுந்ததற்கு இணையாக மற்றொரு ஆழ்துளைக் கிணறு தொண்ட துவங்கி உள்ளனர். விரைவில் குழந்தை பத்திரமாக மீட்கப்படும்", என்று உறுதியளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.