கங்கை நதியில் மிதந்து வந்த அழகான மரப் பெட்டி.! திறந்து பார்த்த படகோட்டிக்கு காத்திருந்த ஆச்சரியம்.!
கங்கை நதியில் குழந்தை ஒன்று அழகான மரபெட்டிக்குள் இருந்த படி மிதந்து வந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியில் இருக்கும் கங்கை நதி ஆற்றங்கரையோரம் மரப்பெட்டி ஒன்று மிதந்து வந்துள்ளது. அப்போது ஆற்றங்கரை அருகே இருந்த உள்ளூர் படகோட்டி குல்லு சவுதாரி என்பவர் இந்த மரப்பெட்டியை பார்த்துள்ளார். மேலும், அந்த பெட்டியின் உள்ளே குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக விரைந்த படகோட்டி அந்த மரப்பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அந்த பெட்டியின் உள்ளே சிவப்பு நிற பட்டுத் துணியில் குழந்தை சுற்றி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த மரப்பெட்டிக்குள் காளிதேவியின் புகைப்படம் இருந்துள்ளது.
மேலும், அந்த மரப்பெட்டியில் குழந்தையின் பிறப்பு சான்றிதழும் இருந்துள்ளது. இதையடுத்து, அந்தப்படகோட்டி குழந்தையை தானே வளர்க்க விரும்பி குழந்தையை வீட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குழந்தையை படகோட்டியிடம் பெற்றுக்கொண்ட போலீசார் குழந்தையை காப்பகத்தில் சேர்த்தனர்.
குழந்தையின் பெயர் கங்கா என பிறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தையின் உடல்நலனை பரிசோதித்து பார்த்ததில், குழந்தைஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது. மேலும், குழந்தை மிதந்து வந்த மரப்பெட்டிக்குள் குழந்தை பிறந்த குறிப்புகள், ஜாதகம், காளி தேவியின் படம் மற்றும் அக்குழந்தை கங்கைமகள் என்று குறிக்கும் வாசகமும் இடம் பெற்றுள்ளது. கங்கையின் மகளை வளர்ப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் உத்தரப்பிரதேச மாநில அரசு செய்யும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதுடன், படகோட்டியின் மனிதாபிமான செயலையும் பாராட்டியுள்ளார்.