இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த முதல் நபர்! சிகிச்சை குறித்து என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!
Corono virus cured persion talk about treatment
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 107 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த டெல்லியைச் சேர்ந்த ரோகித் தத்தா என்ற 45 வயது நபர் ஒருவர் கொரோனா வைரஸ் குறித்தும் அதற்கான சிகிச்சை குறித்தும் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் தோல் கண்காட்சிக்காக இத்தாலிக்கு சென்றிருந்தேன். பின்னர் ஐரோப்பாவிற்கு சென்றேன்.
அப்பொழுது கொரோனா பாதிப்பு குறித்த அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால் சில நாட்களில் காய்ச்சல் ஏற்பட்டது. நான் மாத்திரை உட்கொண்ட நிலையில் சரியானது. பின்னர் மீண்டும் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டேன். அப்பொழுது எனக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, என்னை தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில், அவர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மருத்துவமனை வார்டு சொகுசு ஹோட்டல் போல இருந்தது. அங்கு ஊழியர்கள் உயர்ந்த சுகாதாரத்தை பின்பற்றினர். மேலும் இது சாதாரண சளி, காய்ச்சல் போன்றதுதான் விரைவில் சரியாகிவிடும் என ஆறுதலாக இருந்தனர். மேலும் கொரோனா பாதிப்பு உறுதியானதும் நான் இறந்துவிடுவேனோ என மிகவும் பயந்தேன். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் எனக்கு உதவினர். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக பரிசோதனை மேற்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுடன் பயணித்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் உயிர்கள் பாதுகாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.