சுற்றுலாவுக்கு வந்த கேரள தம்பதியினர் பழனியில் தூக்குப் போட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது..!
சுற்றுலாவுக்கு வந்த கேரள தம்பதியினர் பழனியில் தூக்குப் போட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது..!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தனியார் தங்கும் விடுதியில் கேரளாவில் இருந்து வந்த தம்பதியினர் தூக்குமாட்டி, தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் சுகுமாறன் (66). இவர் ஒரு மளிகை கடை வைத்துள்ளார். இவரின் மனைவி சத்தியபாமா (62). இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சுகுமாறன் வங்கிகளில் நிறைய கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று சுகுமாறன், சத்தியபாமா தம்பதியினர் தனது மகன் சதீஷிடம், கொடைக்கானலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு, ஆலத்தூரில் இருந்து கிளம்பியுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் பழனிக்கு வந்து தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
பிறகு அவர்கள் இருவரும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் இரவு உணவு முடித்துவிட்டு மீண்டும் விடுதி அறைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் விடுதியின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி காவல்துறையினர், விரைந்து வந்து உயிரிழந்த சுகுமாறன், சத்தியபாமா தம்பதியினரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு இது குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விடுதி அறையில் காவல்துறையினர், சோதனை செய்த போது அவர்களுக்கு ஒரு கடிதம் கிடைத்தது.
அதில், தங்களுக்கு வங்கி கடன் பிரச்சினை உள்ளதாகவும், அதை கட்ட முடியாததால் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்ததாகவும், இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று, மலையாளத்தில் உருக்கமாக எழுதி வைத்திருந்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.