தேர்வில் பிட்டடித்த தங்கையை கண்டித்ததால் காவலரை தாக்கிய அண்ணன்!
தேர்வில் பிட்டடித்த தங்கையை கண்டித்ததால் காவலரை தாக்கிய அண்ணன்!
கர்நாடக மாநிலத்தில் இரண்டாம் ஆண்டு பியூசி இறுதித் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் கலபுரகி மாவட்டத்தில் உள்ள அப்சல்புரா தேர்வு மையத்தில் தேர்வு முறைகேட்டை தடுக்கும் வகையில், போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.
அதன்படி, ஏட்டு பண்டித் பான்ட்ரே என்பவர் தேர்வு மைய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது தேர்வு மையத்தில் மாணவி ஒருவர் காப்பியடித்து தேர்வு எழுதுவதை கவனித்த காவலர், மாணவியை கண்டித்ததோடு, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தேர்வு முடிந்த பின் வெளியே வந்த மாணவி தனது சகோதரர் கைலாசிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த கைலாஷ் தனது நண்பருடன் சேர்ந்து காவலரை அசிங்கமாக திட்டி, கல்லால் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் காவலரை தாக்கிய கைலாஷ் மற்றும் அவரது நண்பர் சமீரையும் கைது செய்தனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஏட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.