"ஒரு கிலோ கத்தரிக்காய் 20 பைசா" - ஆத்திரத்தில் அனைத்து செடிகளையும் அழித்த விவசாயி
farmer destroyed brinjal plantation
மகாராஷ்டிராவில் ஒரு கிலோ கத்தரிக்காய் 20 பைசாவுக்கு விற்பனையானதால் வேதனை அடைந்த விவசாயி, ஆத்திரத்தில் அனைத்து கத்திரிக்காய் செடிகளை தோட்டத்தில் இருந்து பிடுங்கி வீசியுள்ளார்.
இந்தியாவில் விவசாயிகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. ஒரு பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து விட்டதால் விவசாயிகள் போதிய அளவிற்கு விளைச்சலை கொடுக்க முடியவில்லை. அவ்வாறு சிரமப்பட்டு விளைச்சலை அதிகரித்தாலும் அதற்கேற்ற விலையும் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கூட விவசாயிகள் ஒன்றிணைந்து தலைநகரான டெல்லியில் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். ஆனால் அரசு சார்பாக அவர்களுக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மகாராஷ்டிரா மாநிலம் அஹமதுநகர் மாவட்டம் சகுறி கிராமத்தை சேர்ந்தவர் பவாகி என்ற விவசாயி. இவர் தனது தோட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து உற்பத்தி செய்த கத்தரிக்காய் வெறும் 65 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகியுள்ளது. இவ்வாறு பெரும் அளவில் நஷ்டம் ஏற்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாத விவசாயி தன் தோட்டத்தில் இருந்த அனைத்து கத்தரிக்காய் செடிகளையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வேரோடு பிடுங்கி வீசியுள்ளார்.
இதுகுறித்து பவாகி தெரிவிக்கையில், "என்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் கத்தரிக்காய் செடிகளை நட்டு அதற்கு சொட்டு நீர் பாசன குழாய்களை போட்டுள்ளேன். விளைச்சலை அதிகரிப்பதற்காக உரம் மற்றும் பல ரசாயன பொருட்களையும் வாங்கி பயன்படுத்தியுள்ளேன். இதற்காக இரண்டு லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். ஆனால் எனக்கு கிடைத்த வருமானம் வெறும் 65000 ரூபாய்தான். இன்னும் உரம் வாங்கியதற்காக 35000 ரூபாய் கடன் கட்ட வேண்டியுள்ளது. இந்த தொகையை நான் எவ்வாறு தரப் போகிறேன் என்பது எனக்கு தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
"என்னுடைய நிலத்தில் விளைந்த கத்தரிக்காயை மகாராஷ்டிராவில் நாசிக் மற்றும் குஜராத்தின் சூரத் பகுதிகளில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்தபோது எனக்கு ஒரு கிலோவிற்கு வெறும் 20 பைசா மட்டுமே கிடைத்தது. இதனால் மிகவும் மனவேதனைகுள்ளான நான் மேலும் நஷ்டத்தை சமாளிக்க முடியாது என்பதற்காக எனது தோட்டத்தில் உள்ள அனைத்து கத்தரி செடிகளையும் வேரோடு பிடுங்கி வீசி விட்டேன்.
என்னுடைய வீட்டில் நான் மூன்று பசுமாடுகளை வளர்த்து வருகிறேன். இப்பொழுது அந்த பசு மாடுகளுக்கு இறை வாங்குவதற்குக் கூட என்னிடம் பணம் இல்லை. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக எனக்கு எந்தவித வருமானமும் இல்லை" என மனவேதனையுடன் கூறியுள்ளார்.
இவ்வாறு நாடு முழுவதும் சிரமப்படும் விவசாயிகளின் நலன்களை காக்க அரசு எந்தவித நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. இவர்களின் துயரை போக்க அரசு உடனடியாக அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் கருத்தாகும்.