மீண்டும் விவசாயிகள் போராட்டம்..!! டெல்லியை அதிரவைத்த கிசான் மகா பஞ்சாயத்து..!!
மீண்டும் விவசாயிகள் போராட்டம்..!! டெல்லியை அதிரவைத்த கிசான் மகா பஞ்சாயத்து..!!
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நேற்று நடைபெற்றது. 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' அமைப்பு அழைப்புவிடுத்திருந்த இந்த போராட்டம் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது
இந்த போராட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். 'கிசான் மகா பஞ்சாயத்து' என்ற பெயரில் நடந்த இப்போராட்டத்திற்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் தலைமை தாங்கினார்.
இதன் பின்னர், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 15 பேர் கொண்ட குழு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். இந்த சந்திப்பில் விவசாயிகளுக்காக நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சர் நரேந்திரசிங் தோமர் விவசாய சங்கங்களின் குழுவினருக்கு விளக்கினார்.
போராட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், "மத்திய பா.ஜனதா அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. மரபணு மாற்று விதைகளுக்கு அனுமதி அளித்ததன் மூலம் மண்ணையும், மக்களையும் அழிக்க நினைக்கிறது" என்று கூறினார்.