7 நாட்கள், 1200 கிமீ.. தனது தந்தையை அமரவைத்து சைக்கிளை ஓட்டிவந்த 15 வயது சிறுமிக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம்!
girl cycling with injuredd father in 1200 km
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஜோதிகுமாரி. 15 வயது நிறைந்த இவர் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை மோகன் பாஸ்வான். இவர் டெல்லி அருகேயுள்ள குர்கானில் ரிக்ஷா தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஜோதிகுமாரி தனது தந்தையை பார்க்க குர்கானுக்கு சென்றுள்ளார். அப்பொழுது கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் ஊருக்கு திரும்பமுடியாமல் ஜோதி தனது தந்தையுடன் தங்கியிருந்துள்ளார். மேலும் வேலை எதுவும் இல்லாமல் கையில் பணம் எதுவுமின்றி அவர்கள் அங்கு பட்டினியால் தவித்து வந்துள்ளனர்.
அதனால் அவர்கள் தங்களது சொந்த மாநிலமான பீகாருக்கு திரும்ப முடிவு செய்து தங்களிடமிருந்த பணத்தை வைத்து சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளனர். மேலும் ஜோதியின் தந்தைக்கு காயமடைந்த நிலையில், அவரை சைக்கிளின் பின்புறம் அமரவைத்து சுமார் ஏழு நாட்கள் 1200 கிலோ மீட்டர் ஜோதியே சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். மேலும் அவருக்கு இடையில் லாரி டிரைவர்கள் சிலர் உதவி செய்துள்ளனர்.
இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு, ஜோதிகுமாரி தங்களது மையத்தில் சைக்கிள் பந்தய சோதனையில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் இதில் அவர் தேர்ச்சி அடைந்தால் டெல்லியில் உள்ள தேசிய சைக்கிள் பந்தய அகாடமியில் பயிற்சி வழங்கப்பட்டு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் .அவர்களது அனைத்து செலவையும் தாங்களே ஏற்றுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.