சிகிச்சைக்கு வந்த பெண்ணின் 2 கிட்னியையும் திருடிய மருத்துவமனை; அதிர்ச்சி சம்பவம்..!!
சிகிச்சைக்கு வந்த பெண்ணின் 2 கிட்னியையும் திருடிய மருத்துவமனை; அதிர்ச்சி சம்பவம்..!!
பீகாரில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் இரண்டு சிறுநீரகங்களையும் திருடிய மருத்துவமனையின் உரிமையாளரும், மருத்துவரும் தலைமறைவு.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் வசிப்பவர் சுனிதா தேவி. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து வயிற்றுவலி இருந்து வந்தது. அதனால் அவர் வேறொரு மருத்துவமனையை நாடினார்.
அந்த மருத்துவமனை மருத்துவர்கள், சுனிதா தேவியின் இரண்டு சிறுநீரகங்களும் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, பாட்னாவில் இருக்கும் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டார். தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
அந்த பெண்ணிற்கு தொடர்ந்து "டயாலிசிஸ்" செய்யப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மேம்பட்டபிறகு மாற்று சிறுநீரக அறுவைசிகிச்சை செய்ய இருக்கின்றனர். அதேநேரம், மேலும் சில சோதனைகளுக்குப் பிறகே அந்தப் பெண்ணின் சிறுநீரகங்கள் இரண்டும் திருடப்பட்டுள்ளனவா என்று உறுதியாக சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் பெண்ணின் சிறுநீரகங்களை திருடியதாக கூறப்படும் மருத்துவமனை உரிமையாளரும், மருத்துவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர். அந்த மருத்துவர் போலி மருத்துவராக இருக்கக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அந்தப் பெண்ணின் சிகிச்சை செலவு முழுவதையும் ஏற்பதாக மாநில அரசு அவரது குடும்பத்தினருக்கு உறுதி அளித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.