கொரோனா பாசிட்டிவ் என தெரிந்ததும் வாடகைக்கு குடியிருந்தவர்களை வீட்டுக்குள் பூட்டிவைத்த உரிமையாளர்!
house owner locked corona patient
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதும் வாடகைக்கு குடியிருந்தவர்களை வீட்டு உரிமையாளர் பூட்டிவைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்ட்டூரில், சட்டெனபள்ளி பகுதியில் 28 வயதான வாலிபருக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தனது வீட்டு உரிமையாளரிடம் தற்காப்பு நடவடிக்கைகளுடன் இருக்குமாறு சொல்லிவிட்டு வந்துள்ளார். ஆனால் அந்த இளைஞரை பின்தொடர்ந்து வந்த வீட்டு உரிமையாளர் கொரோனா தொற்று பாதித்த நபரையும், அவருடைய தாயையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார்.
இதானால் பதட்டம் அடைந்த அந்த வாலிபர் தனது செல்போனில், கொரோனா பாதித்த எங்களை வீட்டு உரிமையாளர் வீட்டிற்குள் பூட்டி வைத்துள்ளார் என பேசி வீடியோ பதிவு செய்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தொற்று பாதித்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, உரிமையாளரை எச்சரித்துள்ளனர்.
மேலும், வாடகைக்கு குடியிருப்பவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வீட்டு உரிமையாளர்கள் குறித்து தகவல்களை அரசுக்கு அளிக்குமாறு ஆந்திர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.