ஒருவழியாக முடிவுக்கு வந்த லடாக் மோதல் விவகாரம்! படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்!
india china border issue
பதற்றமான சூழல் நிலவும் கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்ட இந்திய, சீன படைகளை விலக்கிக் கொள்ள இரு தரப்பு ராணுவமும் ஒப்புக் கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. லடாக்கின் கிழக்கே உள்ள பங்கோங் சோ ஏரி, டெம்சோக், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் சீன ராணுவம் ஊடுருவியது. இதனால் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த மாதம் 5 மற்றும் 6-ந் தேதிகளில் மோதல் ஏற்பட்டது.
இந்தநிலையில், கல்வான் பள்ளத்தாக்கு, பங்கோங் சோ உள்ளிட்ட பகுதிகளில் பதற்ற தணிப்பு பணிகளில் இந்திய வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பணிகளின்போது கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ஆம் தேதி இரவில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பு வீரர்களும் கற்கள், கம்பிகள் மூலம் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அங்கு நடந்த பயங்கர மோதலில் இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உள்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் பலி எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அங்கும் 35 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனால், கிழக்கு லடாக் பிராந்தியத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் மீண்டும் இரு நாட்டு ராணுவமும் படைகளை குவிக்க பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து 2 வது கட்டமாக லெப்டினென்ட் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை 14 மணி நேரம் நீடித்தது.
அந்த பேச்சுவார்த்தையில், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மீது சீன படையினர் நடத்திய திட்டமிட்ட தாக்குதலை கடுமையாக கண்டித்ததுடன், கிழக்கு லடாக்கில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் சீன படைகளை உடனடியாக திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது. அதோடு, படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதில், இரு தரப்பினர் இடையே சுமூக ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. லடாக் பகுதியில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கிக் கொள்வதை இரு தரப்பும் நடைமுறை படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், லடாக் எல்லை பதற்றம் இனி தணியத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.