ராணுவ ரகசியங்களை காதலியிடம் வெளியிட்ட அதிகாரி;..கைது செய்த ராஜஸ்தான் போலீசார்..!
ராணுவ ரகசியங்களை காதலியிடம் வெளியிட்ட அதிகாரி;..கைது செய்த ராஜஸ்தான் போலீசார்..!
பாகிஸ்தானிய பெண் ஏஜென்டிடம் ரகசியங்களை கசியவிட்ட இந்திய ராணுவ உயர் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் இந்திய ராணுவத்தின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் உள்ளவர் பிரதீப்குமார். இவரது செல்போனுக்கு ஆறேழு மாதங்களுக்கு முன் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தான் மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரை சேர்ந்தவர் என்றும், தனது பெயர் சதம் என்றும் அந்த பெண் அறிமுகம் செய்துகொண்டுள்ளார்.
இதன் பின்னர் இருவரும் சாட்டிங் செய்வது, வாட்ஸப்பில் பேசுவது, வீடியோ கால் செய்வது என்று பழக்கத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் பிரதீப்பிடம் அந்த பெண் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி, இந்திய ராணுவம் தொடர்புடைய ரகசிய தகவல்களை அந்தப் பெண் பிரதீப்பிடம் கேட்டுள்ளார். பிரதீப் தனது அலுவலகத்தில் இருந்த ராணுவம் தொடர்புடைய ஆவணங்களின் புகைப்படங்களை திருடி அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளார்.
இது பற்றிய தகவல் அறிந்து ராணுவ அதிகாரிகள் பிரதீப்பை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த 18ம் தேதி மதியத்தில் இருந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதில் மேற்கூறிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அந்தப் பெண் பாகிஸ்தான் நாட்டு உளவுத் துறையில் பணியாற்றி வருபவர் எனவும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளார், என ராஜஸ்தான் காவல்துறை இயக்குனர் ஜெனரல் உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.