நிலவில் புகுந்து விளையாடும் இந்தியன் ரோவர்..!! : இஸ்ரோ வெளியிட்ட புத்தம் புது வீடியோ..!!
நிலவில் புகுந்து விளையாடும் இந்தியன் ரோவர்..!! : இஸ்ரோ வெளியிட்ட புத்தம்புது வீடியோ..!!
பிரக்கியான் ரோவரின் புதிய வீடியோவை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான்-3 விண்கலம் நிலவினை ஆய்வு செய்ய கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை திட்டமிட்டபடி 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் கால் பதித்த 4வது நாடாகவும், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா சாதனை புரிந்தது.
இதனை தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து இறங்கிய பிரக்கியான் ரோவர் ஊர்தி நிலவில் தனது ஆய்வை தொடங்கியது. இந்த மிகப்பெரிய சாதனையை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. முன்னதாக ரஷ்யா நிலவின் தென் துருவத்தை நோக்கி அனுப்பிய லூனா-25 விண்கலம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று, லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வரும் வீடியோவை வெளியிட்டது. இதற்கிடையே, நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிரங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' என பெயரிடப்பட்டுள்ளதாகவும், நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தினம் ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்றும் பிரதமர் மோடி இன்று காலை அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது, நிலவின் தென் துருவத்தில் தரையிரங்கிய இடத்திலிருந்து ஊர்ந்து செல்லும் பிரக்கியான் ரோவரின் புதிய வீடியோவை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.