நிலவில் புகுந்து விளையாடும் பிரக்யான் ரோவர்: தாய் பாசத்துடன் கண்காணிக்கும் விக்ரம் லேண்டர்..!!
நிலவில் புகுந்து விளையாடும் பிரக்யான் ரோவர்: தாய் பாசத்துடன் கண்காணிக்கும் விக்ரம் லேண்டர்..!!
பிரக்யான் ரோவரின் செயல்பாடுகளை விக்ரம் லேண்டர் கண்காணிக்கும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான்-3 விண்கலம் நிலவினை ஆய்வு செய்ய கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை திட்டமிட்டபடி 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் கால் பதித்த 4வது நாடாகவும், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா சாதனை புரிந்தது.
இதனை தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து இறங்கிய பிரக்யான் ரோவர் ஊர்தி நிலவில் தனது ஆய்வை தொடங்கியது. இந்த மிகப்பெரிய சாதனையை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. முன்னதாக ரஷ்யா நிலவின் தென் துருவத்தை நோக்கி அனுப்பிய லூனா-25 விண்கலம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிரக்யான் ரோவர் நிலவில் இருக்கும் பள்ளமான பகுதிகளை புத்திசாலித்தனமாக தவிர்த்து தனது பாதையை மாற்றும் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. இதன் பின்னர் நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் 8 செ.மீ ஆழத்தில் உள்ள வெப்பநிலை குறித்து ரோவர் செய்த ஆய்வு முடிவுகள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதன் பின்னர் நிலவில் இருக்கும் கனிம வளங்கள், ஆக்ஸிஜன் அளவு குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இஸ்ரோ விக்ரம் லேண்டர் பிரக்யான் ரோவரை கண்காணிக்கும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் மேலும், பாதுகாப்பான பாதையை தேடி ரோவர் சுழற்றப்பட்டது. லேண்டர் இமேஜர் கேமரா மூலம் பிரக்யான் ரோவரின் சுழற்சி படம்பிடிக்கப்பட்டது.
பிரக்யான் ரோவர், சந்தமாமாவின் முற்றத்தில் ஒரு குழந்தை விளையாட்டுத்தனமாக உல்லாசமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதனை விகரம் லேண்டர் தாய் பாசத்துடன் பார்ப்பது போன்ற உணர்வு இந்த வீடியோவின் மூலம் ஏற்படுகிறது. இல்லையா? என்று பதிவிடப்பட்டுள்ளது.