உ.பி-யில் கலவரக்காரர்களின் மீது எடுத்த நடவடிக்கைக்கும், வீடுகளை இடித்ததற்கும் சம்பந்தமில்லை: சுப்ரீம் கோர்ட்டில் அரசு பதில் மனு..!
உ.பி-யில் கலவரக்காரர்களின் மீது எடுத்த நடவடிக்கைக்கும், வீடுகளை இடித்ததற்கும் சம்பந்தமில்லை: சுப்ரீம் கோர்ட்டில் அரசு பதில் மனு..!
உத்திரப்பிரதேசத்தில் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கும், வீடுகளை இடித்ததற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அந்த மாநில அரசு கூறியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் வீடுகள் இடிப்பதை தடுக்கக் கோரி, ஜமியத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, விக்ரம்நாத் ஆகியோர் அமரவின் முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உத்திரப்பிரதேசத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோ, இடிப்பதோ உரிய விதிகளைப் பின்பற்றி செய்ய வேண்டும். விதிகளைப் பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அனுமதிக்க முடியாது.
வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து உத்திரப்பிரதேச அரசு 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வீடுகளை இடிக்க இடைக்காலத் தடை விதிக்க முடியாது, பழிவாங்கும் நடவடிக்கையாக வீடுகளை இடிக்க கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், உத்திரப்பிரதேசத்தில் வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் உ.பி அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து உ.பி. அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் இடிக்கப்பட்ட வீடுகள் உரிய நடைமுறைகளை பின்பற்றியே நடைபெற்றது. கலவரக்காரர்களுக்கு எதிராக வெவ்வேறு சட்டங்களின் அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகவே, கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கும், வீடுகளை இடித்த சம்பவத்திற்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை.
மனுதாரராகிய ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் அமைப்பு, சில ஊடகங்களின் வாயிலாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த வழக்கை தொடுத்துள்ளது. ஆகவே இந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உ.பி. அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.