வாட்டர் ஹீட்டரில் வெளியேறிய கார்பன் மோனாக்சைடு; 6 மாத கர்ப்பிணி பரிதாப பலி., சிறுவன் உயிர் ஊசல்.!
வாட்டர் ஹீட்டரில் வெளியேறிய கார்பன் மோனாக்சைடு; 6 மாத கர்ப்பிணி பரிதாப பலி., சிறுவன் உயிர் ஊசல்.!
காற்றோட்ட வசதி இல்லாத குளியலறையில் வாட்டர் ஹீட்டரை உபயோகம் செய்வது, பராமரிப்பு இல்லாமல் அலட்சியமாக அதனை பயன்படுத்துவது என்ன மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சாட்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், சதாசிவம் நகர் பகுதியைச் சார்ந்த பெண்மணி ரம்யா (வயது 23). இவர் ஆறு மாத கர்ப்பிணி ஆவார். ரம்யாவின் கணவர் ஜெகதீஷ் காய்கறி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். தம்பதிகளுக்கு சம்பரத் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவிலுக்கு சென்று வரலாம் என குடும்பத்தினர் முடிவு எடுத்துள்ளனர்.
வீட்டில் ரம்யா குளித்துக்கொண்டிருந்த நிலையில், அவரது மகன் சம்பரத் இருந்துள்ளார். ஜெகதீஷ் அப்போது கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகன் சுயநினைவின்றி கிடந்த நிலையில், மனைவி கழிவறையில் எந்த விதமான சத்தமும் இல்லாமல் இருந்துள்ளார்.
இதனால் அதிர்ந்துபோனவர் கழிவறையின் கதவை உடைத்து மனைவியை மீட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கர்ப்பிணி பெண்மணி கார்பன் மோனாக்சைடு தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் அவரது மகன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் ரம்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கழிவறையில் உபயோகம் செய்யப்பட்டுள்ள வாட்டர் ஹீட்டரில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண்ணை தாக்கியதும், அவரது மகனும் பாதிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
கார்பன் மோனாக்சைடு ஒரு மனம் இல்லாத வாயு என்பதால், அது வெளியானது யாருக்கும் தெரியவில்லை. சரியான காற்றோட்டம் இல்லாத இடங்களில் பயன்படுத்தப்படும் வாட்டர் ஹீட்டர் காரணமாக உருவாகும் கார்பன் மோனாக்சைடு நொடியில் உயிரை பறிக்கும் ஆபத்து கொண்டது என்றும் அறிவுறுத்துகின்றனர்.