அரசு, தனியார் என 4 மருத்துவமனைகள் அலட்சியம்.. பாம்பு கடியால் பாதித்த பெண் சிகிச்சைக்காக அலைந்து பரிதாப மரணம்.!
அரசு, தனியார் என 4 மருத்துவமனைகள் அலட்சியம்.. பாம்பு கடியால் பாதித்த பெண் சிகிச்சைக்காக அலைந்து பரிதாப மரணம்.!
பாம்பு கடித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மருந்து இல்லை என்று கூறி, 4 மருத்துவமனைகள் அலைக்கழித்ததால் பெண் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு மாவட்டம், சாலமரதஹள்ளியை சேர்ந்தவர் சாரதாம்மா (வயது 50). நேற்று முன்தினம் மாலை தனது வீட்டருகே பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்த நிலையில், அங்கு வந்த பாம்பு சாரதாம்மாவை கண்டித்துள்ளது. அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சாரதாம்மாவை மீட்டு கோணிபீடுவில் செயல்பட்டு ஆரம்ப சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பணியில் இருந்த ஊழியர்கள் பாம்பு கடிக்கு இங்கு மருந்து இல்லை என்று கூறி, சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், சிக்கமகளூரு மாவட்ட அரசு மருத்துவமனை, 2 வெவ்வேறு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போதிலும், அங்கும் இதே பதில்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பாம்பின் விஷம் தலைக்கேறி வாயில் நுரைதள்ளி சாரதாம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஈஸ்வரப்பா, "பெண்மணி பாம்பு கடிதத்திற்கு சிகிச்சை பெற இயலாமல் மரணமடைந்த விவகாரம் என் கவனத்திற்கு வந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தை பொறுத்த வரையில் அது இயற்கையாகவே மலைகள், வயல்வெளிகள் சார்ந்த பகுதி ஆகும். சிக்கமகளூர் மலை சுற்றுலாத்தலங்களுக்கு பிரபலமான மாவட்டம். இவ்வாறான இடங்களில் பாம்புகள் இருப்பது இயற்கையான ஒன்று. ஆனால், அங்குள்ள மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு மருந்து இல்லை என்று ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட அளவிலான மருத்துவமனைகள் வரை கூறப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்தது மருத்துவ கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தோல்வியை உறுதி செய்கிறது அல்லது மருந்து பற்றாக்குறையை உறுதி செய்கிறது.