ஹிஜாப், காவித்துண்டு பிரச்சனை.. பூதாகரமாக வெடித்த சர்ச்சை.. 144 தடை உத்தரவு அமல்..!
ஹிஜாப், காவித்துண்டு பிரச்சனை.. பூதாகரமாக வெடித்த சர்ச்சை.. 144 தடை உத்தரவு அமல்..!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமோகா மாவட்டத்தில், முஸ்லீம் மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருகை தந்த நிலையில், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பள்ளியின் முன்பு மாணவிகள் போராட்டம் நடத்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.
மேலும், முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவாக முஸ்லீம் மாணவர்களும் போர்க்கொடி உயர்த்த, இந்து மாணவர்கள் காவித்துண்டை மறுநாள் அணிந்து வந்து சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தினர். மறுநாளில், பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் நீலத்துண்டை அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
அடுத்தடுத்த சர்ச்சை சம்பவங்களால் சிவமோகா மாவட்டத்தில் பெரும் பரபரப்பு உருவாக, முஸ்லீம் மாணவிகள் நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி கேட்டு மனுத்தாக்களும் செய்தனர். இவ்வாறான பரபரப்பு சூழ்நிலையால் பதற்றம் ஏற்பட்டு, மத மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்தது.
இந்த நிலையில், கல்லூரியில் பயின்று வரும் இந்து மாணவர்கள், பிரச்சனையை மேலும் பரபரப்பாக்கும் வகையில் கல்லூரியில் தேசிய கொடியை அகற்றி காவிக்கொடியை ஏற்றினர். இதனால் கலவர சூழல் உறுதி செய்யப்பட்டு, இருதரப்பு மோதலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.