என்ன கொடுமடா இது? எலியால் கேரளாவிற்கு வந்த அடுத்த சோதனை
என்ன கொடுமடா இது? எலியால் கேரளாவிற்கு வந்த அடுத்த சோதனை
கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடானது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
தற்போது அங்கு வெள்ளம் முழுவதுமாக வடிந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதே சமயம் மழைக்கு பிந்தைய தொற்றுநோய்கள் கேரள மக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகின்றன.
அசுத்தமடைந்துவிட்ட தண்ணீர் மூலம் பலதரப்பட்ட தொற்றுநோய்கள் மக்களிடம் பரவிவருகின்றன. அவற்றுள் ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சல்தான் அனைவரையும் அச்சமூட்டுகிறது.
300-க்கும் மேற்பட்டோர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் எலி காய்ச்சலுக்கு இதுவரை 74 பேர் பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்தபோது தொற்றுநோய் பரவி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்க இருக்கும் சூழலில், தமிழகத்துக்கும் சேர்த்து இயற்கை விடுத்திருக்கும் எச்சரிக்கையாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்.
எலிக்காய்ச்சல் பரவுவதற்கு முக்கியக் காரணமே தெருக்களில் தண்ணீர் தேங்குவதுதான். தமிழகத்திலும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் என்று இயற்கை தந்த நீராதாரங்கள் அனைத்தும் அடுக்குமாடிக் கட்டிடங்களாக மாறிவிட்ட காரணத்தால், கனமழை பெய்தாலே, தண்ணீர் வடிய வழியில்லாமல், தெருக்களெல்லாம் குளங்கள் ஆகிவிடுவதைப் பார்க்கிறோம். எனவே, நாம் அலட்சியமாக இல்லாமல் நமது அக்கம் பக்கத்தை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும்.